தஞ்சாவூர், நவ.7: இத்தாலி, இங்கிலாந்து ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்த 12-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நேற்று தஞ்சையை சுற்றி பார்த்தனர். அப்போது, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை தாங்களே மார்க்கெட் மூலம் விற்பனை செய்யும் உழவர் சந்தை செயல்பாடுகளை பார்வையிட்டனர். இதையடுத்து நேற்று காலை காரைக்குடி செல்லும் வழியில் தஞ்சை உழவர் சந்தைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். உழவர் சந்தையை சுற்றிப் பார்த்த அவர்கள் அங்குள்ள விவசாயிகளிடம் காய்கறிகள் விற்பனை குறித்து கேட்டறிந்தனர்.
விவசாயிகளுக்காக உழவர் சந்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுவது குறித்தும் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் தாங்களே விற்பனை செய்து முழு பலனையும் விவசாயிகள் பெறுவது குறித்தும் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஜெய்ஜி பால் விளக்கி கூறினார். பின்னர் வெளிநாட்டினர் விவசாயிகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து வெளிநாட்டினருக்கு அங்குள்ள விவசாயிகள் மூலிகை டீ வழங்கி உபசரித்து வழி அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சைக்கிள் மூலம் காரைக்குடி புறப்பட்டனர்.
