தஞ்சாவூர், நவ.6: தஞ்சையில் சட்ட விரோதமாக குட்கா போதைப்பொருட்கள் கடத்தி வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 296 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் படி குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் காவலர்கள் மூலம் தீவிர களண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மேற்பார்வையில், கிழக்கு காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் அடைக்கல ஆரோக்கிய டேவிட் ஆகியோர் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கும்பகோணம் புளியம்போட்டையைச் சேர்ந்த சதீஷ் குமார் வயது (42) மற்றும் ராஜஸ்தான் மாநிலம், பலோதரா மாவட்டத்தைச் சேர்ந்த விம்பாராம் வயது(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 296 கிலோ குட்கா போதைப்பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு அவர்கள் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
