தஞ்சாவூர், நவ.1: தஞ்சையில் தேசிய மாணவர் படையின் சார்பில் தேசிய ஒருமைப்பா ட்டு பேரணி நடைபெற்றது. தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி என்சிசி மாணவர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட தேசிய மாணவர்படை மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி சரபோஜி கல்லூரியில் துவங்கி ஆர்.ஆர்.நகர், ஓல்ட் ஹவுஸிங் யூனிட் வழியாக மீண்டும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் 34 தமிழ்நாடு தனிப்படையின் தளபதி கர்னல் கபில் துளி கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், இந்நிகழ்வில் மன்னர் சரபோஜி கல்லூரி, தமிழ் பல்கலைக்கழகம், தமிழவேல் உமாமகேஸ்வரனார் கல்லூரி, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியின் முடிவில், தேசிய மாணவர் படையும் தமிழ்நாடு தனிப்படை பிரிவின் தளபதி கர்னல் கபில் துளி தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
