Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சை மாவட்டத்தில் தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தஞ்சாவூர், ஜூலை 26: தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்துமுகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு ”தமிழ்ச்செம்மல்” விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. ”தமிழ்ச்செம்மல்” விருதாளர்களுக்கு ரூ.25,000 ரொக்கப் பரிசுத்தொகையும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பெற்று வருகின்றன.

இவ்வகையில் 2025ம் ஆண்டிற்கான ”தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் < http://tamilvalarchithurai.tn.gov.in/ > என்ற வலைத்தளத்தில் ”விண்ணப்பப் படிவங்கள்” என்ற தலைப்பின்கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தினை இருபடிகளில் உரியவாறு நிறைவு செய்து. தன்விவரக்குறிப்பு, நூல்கள், கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் இரு படிகள் இணைக்கப்பட வேண்டும்).

தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தக்கப் பணிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக்கடிதம், மாவட்டத்தில் செயற்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம், வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்பு சான்று அல்லது ஆதார் அட்டை நகல் மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்களுடன், ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கானச் சான்றுகளையும் இணைத்து தஞ்சாவூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.08.2025ஆம் நாளுக்குள் கிடைக்கப்பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும்.மேலும், விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை 04362-271530 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தமிழறிஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.