Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சையில் சுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவிக்கும் மீன் சந்தை

தஞ்சாவூர், நவ.28: தஞ்சாவூர் மீன் மொத்த விற்பனை சந்தை சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிப்பதால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தஞ்சை மாநகராட்சி கொடிமரத்து மூலைப்பகுதி அகழியையொட்டி மீன் மொத்த வியாபார சந்தை அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இச்சந்தையின் பராமரிப்பு ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சந்தைக்கு அதிகாலை 2 மணி முதலே நாகை, ராமேஸ்வரம், வேதாரண்யம், கட்டுமாவடி, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரத்திற்காக லாரிகளில் மீன்கள் கொண்டுவரப்படுகிறது. இவற்றை சில்லரை வியாபாரிகள் ஏலம் மூலம் வாங்கி சென்று வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பொதுமக்கள் இச்சந்தைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இச்சந்தை சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிப்பது வியாபாரிகளையும் பொதுமக்களையும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது. இருபுறமும் மொத்த வியாபாரம் நடைபெறும் நிலையில் நடுவில் உள்ள பாதை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மீன் பெட்டிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் வியாபாரிகள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் தேங்கி கடும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இத்துடன் மீன் கழிவுகளும் அதில் சேர்வதால் கடும் துர்நாற்றம் அப்பகுதியில் வீசுகிறது. தற்போது தொடர் மழை காரணமாக தண்ணீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மட்டுமின்றி அப்பகுதியில் குடியிருப்போர், பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற காத்திருக்கும் பயணிகள் முகம் சுளித்து வருகின்றனர்.

எனவே, அப்பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மேலும் மீன் சந்தையில் கழிவறை இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், சந்தைக்கு வெளியே சாலையின் இரு புறமும் இருசக்கர வாகனங்கள், மினி லாரிகள் நிறுத்தப்படுவதால் அச்சாலையில் அதிகாலை 2 மணி முதல் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதை தவிர்க்க அச்சாலையில் அதிகாலை 2 மணி முதல் 7 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதை நிறுத்தி மாற்று பாதையில் செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.