தஞ்சாவூர், நவ.28: தஞ்சை ஓவியத்தில் சிறந்து விளங்கிய பெண்ணுக்கு பூம்புகார் விருதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கி கெளரவித்தார். தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் 2023-24 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கான பூம்புகார் விருதுகள் மாமல்லபுரத்தில் வழங்கப்பட்டன. இவ்விருதுக்கு தஞ்சாவூரை சேர்ந்த விஜயசக்தி அறிவானந்தம் (25) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கு, தஞ்சை ஓவியத்தில் சிறந்து விளங்கிய பெண்ணுக்கான பூம்புகார் விருதை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். மேலும் இவருக்கு விருதுடன் வெள்ளி நாணயம் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இவர் தனிப்பட்ட முறையில் நன்கு பயிற்சி பெற்ற பின்னர் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து, பல விதமான நுண்ணிய நுட்பங்களை அறிந்து செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

