தஞ்சாவூர், அக்.25: நல்லிச்சேரி பெரிய வாய்க்கால் தூர்வாரப்படாததால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லிச்சேரி மற்றும் பசுபதிகோவில் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
விவசாயிகளுக்கு வடிகாலாக பயன்பட்டு வரும் பெரிய வாய்க்காலில் செடி, கொடிகள் நாணல்கள் முளைத்து புதர் மண்டி வாய்க்காலை முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளதால், மழை நீர் வடிய வழியில்லாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது அதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய வாய்க்கால் முழுவதையும் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
