தஞ்சாவூர், டிச.12: தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. இவை தவிர ஏராளமான மினி பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. எப்போதும் பழைய பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்த நிலையில் நேற்று அரசு பஸ் மற்றும் ஒரு தனியார் மினிபஸ்சுக்கு இடையே யார் முன்னே சென்று பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக பிரச்சினை எழுந்தது. இதில் 2 நிமிட நேர பிரச்சினையால் அரசு பஸ்சை மறித்து தனியார் மினிபஸ் டிரைவர் திடீரென பயணிகளை ஏற்றி கொண்டு செல்ல முற்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அரசு பஸ் டிரைவர் , கண்டக்டர் அந்த மினிபஸ்சை நிறுத்தி சிறை பிடித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பஸ் நிலையத்தில் இரண்டு பஸ்களையும் நிறுத்தி டிரைவர், கண்டக்டர்கள் மாறி, மாறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமதானப்படுத்தினர். மேலும் முன்கூட்டியே பயணிகளை ஏற்ற முற்பட்ட தனியார் மினி பஸ்சை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இதுபோல் அடிக்கடி யார் பஸ்சை முன்னே எடுப்பது போன்ற நேர பிரச்சினை ஏற்படுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


