தஞ்சை மாநகர திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனை கூட்டம் எம்எல்ஏக்கள், மேயர் உள்ளிட்டோர் பங்கேற்பு
தஞ்சாவூர், டிச.12: தஞ்சாவூர் மாநகர திமுக சார்பில் 1வது வார்டு பள்ளி அக்ரஹாரத்தில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர செயலாளர் மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். அப்போது, மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் பேசியதாவது: திமுக தலைவர் ஆணைக்கிணங்க என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டிசம்பர் 10ம் தேதி தொடங்கி, ஜனவரி 10ம் தேதிக்குள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இக்கூட்டம் நடத்தப்பட்டு முடிக்க வேண்டும்.
இதன் மூலம் நாம் அதிக வாக்குகளை சேகரிக்க வேண்டும். ஜனவரி 10ல் இக்கூட்டங்கள் முடிந்தவுடன் ஒவ்வொரு பிஎல்ஓவிடமும் தலைவரே தொடர்பு கொண்டு பேசுவார். எனவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முழு ஈடுபாட்டுடன் அதே நேரம் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். நாம் டெல்டாவில் 42 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் திமுக தலைவர் இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பில் அமர வைக்க வேண்டும். நமது இயக்கத்தை 7வது முறையாக ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வர வேண்டும் என்ற உறுதியுடன் நாம் செயல்படுவோம் என்றார்.
பின்னர், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம் பேசியதாவது: திமுக தலைமை என்ன ஆணையிடுகிறதோ அதை முடிக்க ஓரணியில் திரண்டு செயலாற்றுவோம். எஸ்ஐஆர் மூலம் பீகார் போல தமிழகத்திலும் ஓட்டு திருட்டு நடைபெறும் என அச்சம் ஏற்பட்டது.ஆனால் அதை எல்லாம் முறியடிக்கும் விதமாக நாம் வாக்குச்சாவடி அளவில் களம் இறங்கி செயலாற்றியதால் 90 சதவீதம் வாக்குகளை சேர்த்துள்ளோம்.
துவக்கத்தில் எஸ்.ஐ.ஆர் பணி சற்று அச்சத்தை கொடுத்தாலும் போகப் போக வாக்குகளை சேர்த்து எளிதாக கொண்டு வந்து விட்டோம்.
அடுத்து நாம் செய்ய வேண்டியது வாக்கு கேட்கும் பணி தான். அதை முறையாக செய்து முடித்து இரண்டாவது முறையாக திமுக தலைவரை ஆட்சி கட்டிலில் அமர வைக்க உறுதி கொள்வோம் என்றார். தஞ்சை மாநகர செயலாளர் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது: திமுக தலைவர் ஆணைக்கு இணங்க செயலாற்றி வருகிறோம். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளில் வாக்குகளை சேர்க்கும் பணியில் நாம் சிறப்பாக பணியாற்றி உள்ளோம். அதேபோல் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி’ என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
இதற்கு நாம் முழுமையாக பணியாற்ற வேண்டும். கடந்த 2016 தேர்தலில் 1வது வார்டில் நமக்கு வாக்குகள் குறைந்தாலும் 2021, 2023 தேர்தலில் மிக அதிக வாக்குகளை பெற்றுத் தந்த வார்டு 1வது வார்டு. அதேபோன்று வரக்கூடிய 2026 தேர்தலிலும் 1வது வார்டில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற வேண்டும் என்றார். கூட்டத்தில் தலைமை கழக செயலாளர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் கனகவல்லி பாலாஜி, மாநகர துணை செயலாளர் காளையார் சரவணன், பகுதி செயலாளர் கார்த்தி, பகுதி அவைத் தலைவர் கணேசன், மாமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன், 1வது வட்ட பொறுப்பாளர் ராமானுஜம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


