மழையில் சேதமடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணிகள் விரைவில் முடிவடையும் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
தஞ்சாவூர், டிச.11: தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் வடகிழக்கு பருவமழையால் சேதம் அடைந்துள்ள நிலையில், இது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் இந்த வாரத்துக்குள் முடிவடையும் என வேளாண்மை இணை இயக்குனர் வித்யா தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்து தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது.
இதன் தொடக்க காலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்ததையடுத்து, குறுவை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி காணப்பட்டன. இதனால் நெல்மணிகள் முளைத்து விவசாயிகள் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் டிட்வா புயல் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் சம்பா, தாளடி இளம் நடவுப்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 13,137 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதில் பல இடங்களில் நடவு செய்யப்பட்ட இளம் நெற்பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு அரசு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் தற்போது 3 லட்சத்து 30 ஆயிரத்து 925 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. டிட்வா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையினால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பின்னர் மழை நின்ற பின்னர் வயல்களில் தேங்கிய நீர் வடியத் தொடங்கின. தற்போது மழை வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகி காணப்பட்டதால் பல இடங்களில் விவசாயிகள் அதனை அழித்து விட்டு மீண்டும் நடவுப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து வேளாண்மைத்துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்த கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கணக்கெடுப்பு பணி இந்த வாரத்துக்குள் முடிவடையும். அதன் பின்னர் தான் எவ்வளவு ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.


