தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி நூதன போராட்டம்: மழைக்கால நிவாரணம் கூடுதலாக வழங்க வலியுறுத்தல்
தஞ்சாவூர், நவ. 11: மண்பாண்ட தொழில் செய்யும் தொழிலாளர்கள் பல்லாண்டு காலமாக வசித்து வருகின்ற வீட்டிற்கும் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் அடிமனை பட்டா வழங்க கோரி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கைகளில் மண்பாண்ட பொருட்களை வைத்து நூதன முறையில் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியதாவது: பொங்கல் திருநாளில் அரசு சார்பாக இலவச அரிசி பருப்பு, கரும்பு சர்க்கரை வேஷ்டி புடவை வழங்குவது போல தைத்திருநாளில் புதிய நெல்மணிகளை அறுவடை செய்து புதிய பானையில் பொங்கல் இட புதிய பாணையும் ஒரு புதிய அடுக்கும் வழங்க வேண்டுமென கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
தமிழக அரசு இந்த ஆண்டு முதல் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும். மழைக் காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்ட தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு மழைக்கால நிவாரண உதவி தொகையாக தமிழக அரசு தலா ரூ. 5000 வழங்கி வருகிறது.
இந்த உதவித் தொகையை மீன்பிடி தலைகாலங்களில் மீனவர்களுக்கு ரூ. 7000 உயர்த்திக் கொடுப்பது போல் மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திட்ட அத்தனை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும். மண்பாண்ட தொழில் செய்யும் தொழிலாளர்கள் பல்லாண்டு காலமாக வசித்து வருகின்ற வீட்டிற்கும் அவர்கள் தொழில் செய்யும் இடத்திற்கும் அடிமனை பட்ட வழங்கிட வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்களில் உணவு வகைகளை சமைத்து சாப்பிடும் நலன்களை பற்றி எதிர்கால மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி பாட புத்தகத்தில் ஒரு பாடப்பிரிவை ஏற்படுத்தி தர தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
