Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தி.நகர் வீட்டில் வெடி சத்தத்துடன் பயங்கர தீ விபத்து தாய், மகன் உடல்கள் கருகிய நிலையில் மீட்பு: சுவர்கள் இடிந்து கிடந்ததால் பரபரப்பு; தடயவியல் துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: தி.நகரில் வெடி சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்த போது, வீட்டில் தாய் மற்றும் மகன் உடல்கள் முழுவதும் எரிந்து கருகிய நிலையில் இறந்து கிடந்தது. தடயவியல் துறை சோதனைக்கு பிறகே விபத்து குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். தி.நகர் கோபால் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (55). இவரது கணவர் ராமகிருஷ்ணன் (58), செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் கிஷோர் குமார் (26). இவர்கள் வாடகை வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் ராஜலட்சுமி வீட்டில் வெடி விபத்து போல் பயங்கர சத்தம் கேட்டது. அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, வீட்டின் சுவர்கள் இடிந்து சிதறி கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, ராஜலட்சுமி மற்றும் அவரது மகன் கிஷோர் குமார் ஆகியோர் சமையல் அறையின் அருகே உள்ள படுக்கை அறையில், முழுவதும் எரிந்து உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறை மற்றும் மாம்பலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், தி.நகரில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் சமையல் அறையில் சோதனை நடத்தியபோது, 2 எரிவாயு சிலிண்டர்கள் இருந்தது தெரியவந்தது. அதில் ஒன்று தற்போது உபயோகத்தில் இருந்தது. மற்றொன்று காலி சிலிண்டராக இருந்தது. ஆனால் சிலிண்டர்கள் எதுவும் வெடிக்கவில்லை என தெரியவந்தது. தி.நகர் உதவி கமிஷனர் விஜயன் மற்றும் மாம்பலம் போலீசார், ராஜலட்சுமி மற்றும் கிஷோர் குமார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெடி விபத்து போல் வீடு முழுவதும் தீயால் கருகி இருந்தால், தடயவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தடயவியல்துறை அதிகாரிகள் அனிதா, தீபா ஆகியோர் வீடு முழுவதும் சோதனை செய்து சில தடயங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். ராஜலட்சுமியின் கணவர் ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்று இருந்ததால், அவர் உயிர்தப்பினார். இந்த விபத்தில் வீடு முழுவதும் சேதடைந்தது. அதேநேரம் என்ன பொருள் வெடித்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தற்கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல்துறை அதிகாரிகள் சோதனை மாதிரிகளை ஆய்வு செய்த பிறகு தான், வீட்டில் வெடித்த பொருள் என்ன என்று தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.