வீரவநல்லூர், ஜூலை 23: சேரன்மகாதேவியில் லோடு ஆட்டோவில் தொங்கியபடி மாணவர்கள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வாட்சப்பில் வைரலாகி வருகிறது. சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேரன்மகாதேவிக்கு பஸ் மற்றும் ரயில்களில் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் கல்லூரி முடிந்து வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள் ரோட்டில் வருகின்ற வண்டிகளில் லிப்ட் கேட்டு பஸ் நிலையம் மற்றும் ரயில்வே ஸ்டேசனுக்கு செல்கின்றனர்.
அப்போது சில மாணவர்கள் லோடு ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களிலும் லிப்ட் கேட்டு செல்கின்றனர். இந்நிலையில் சேரன்மகாதேவியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் அருகில் பாடி கட்டிய லோடு ஆட்டோவில் மாணவர்கள் 2 பேர் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மாணவர்கள் 2 பேர் கல்லூரி சீருடையுடன், முதுகில் பேக் சுமந்தபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். ஆட்டோவின் பின்புறம் காரில் வந்த நபர் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே காவல்துறையினர் விதிமுறையில் ஈடுபடும் மாணவர்கள் மீதும் அதற்கு வழிவகுக்கும் வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.