Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொல்லியல் அலுவலகத்தில் பூட்டி வைத்துள்ள ராஜேந்திர சோழனின் எசாலம் செப்பேட்டை விழுப்புரத்துக்கு கொண்டுவர நடவடிக்கை: ஆட்சியரிடம் வலியுறுத்தல்

விழுப்புரம், ஜூலை 23: தொல்லியல் அலுவலகத்தில் பூட்டி வைத்துள்ள ராஜேந்திர சோழனின் ‘எசாலம் செப்பேட்டை’ விழுப்புரத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, சோழப் பேரரசர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.‌ராஜேந்திர சோழன் வரலாற்றுடன் மிகவும் தொடர்புடைய ஊர் விழுப்புரம் அருகேயுள்ள எசாலம் கிராமம்.

இங்கிருக்கும் ராமநாதீஸ்வரர் கோயிலை ராஜேந்திர சோழனின் குருவான சர்வசிவ பண்டிதர் எழுப்பி இருக்கிறார். இக்கோயிலுக்கு தேவதானமாக 2 கிராமங்களை சேர்ந்த நிலம் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை ராஜேந்திர சோழன் தனது 15வது ஆட்சியாண்டில் (கி.பி.1027) வழங்கியிருக்கிறார். இந்த ஆணை அவரது 24வது ஆட்சியாண்டில் (கி.பி.1036) நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்த தகவலை சொல்லும் ஆவணம் தான் ‘எசாலம் செப்பேடு’. 990 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 15 ஏடுகளை கொண்ட இந்த செப்புப் பட்டயம், மிகப்பெரிய வளையத்தில் கோக்கக்கப்பட்டுள்ளது.

செப்பேட்டின் முதல் நான்கு ஏடுகள் வடமொழியிலும் மற்ற 11 ஏடுகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. ராஜேந்திர சோழன் தன்னால் நிர்மாணிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் அதே பெயரில் சிவனுக்கு ஒரு கோயில் கட்டினார் எனும் அரிய தகவல் எசாலம் செப்பேட்டில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை ராஜேந்திர சோழன்தான் கட்டினார் என்பதற்கான கல்வெட்டு எதுவும் அந்த கோயிலில் இல்லை.

ஆனால் எசாலம் செப்பேட்டில் இந்த வரலாற்று தகவல் பதிவாகி இருக்கிறது. ராமநாதீஸ்வரர் கோயிலில் 11.8.1987ல் திருப்பணிகள் நடந்தபோதுதான் மண்ணுக்குள் புதைந்திருந்த சோழர் கால செப்பேடு மற்றும் சிறியதும் பெரியதுமான 26 செப்பு திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. செப்புத்திருமேனிகள் கோயில் வளாகத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. செப்பேடு மட்டும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு மக்கள் எளிதில் சென்று பார்க்கக்கூடிய நிலை இல்லை. எனவே எசாலம் செப்பேட்டினை கொண்டு வந்து உரிய பாதுகாப்புடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். சோழப் பேரரசர் ராஜேந்திர சோழன் குறித்த வரலாறு பரவலாக அனைவரையும் சென்றடையும் வகையில் இதற்கான உரிய நடவடிக்கைகளை விழுப்புரம் ஆட்சியர் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.