Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆவணி களரி திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

சாயல்குடி, செப்.14: ஏனாதி பூங்குளத்தில் அய்யனார், மாடசாமி கோயிலில் ஆவணி மாத களரி பூக்குழி திருவிழா நடந்தது. முதுகுளத்தூர் அருகே ஏனாதி பூங்குளத்தில் உள்ள பூரணதேவி, புஷ்கலாதேவி உடனுரை அய்யனார், சேதுமாகாளி, தெட்சணா மூர்த்தி மாடன், கருப்பணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மற்றும் ஏனாதி கிராமத்திலுள்ள முத்துகருப்பணசாமி, அக்னி மாடன் ஆவணி மாத களரி திருவிழா கடந்த செப்.2ம் தேதி மாரியூர் கடலில் தீர்த்தமாடி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.

நாள்தோறும் கிராமத்தில் பெண்கள் கும்மியடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பூஜை பெட்டி கொண்டு வருதலுடன் விழா தொடங்கியது. நள்ளிரவில் மயான கொள்ளை பூஜை, அக்னி மாடனுக்கு காவு கொடுத்தல் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அரிவாள் மேல் ஏறி நின்று குறி சொல்லும் சாமியாட்டம் நடந்தது. நேற்று அதிகாலையில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். தொடர்ந்து கோயிலுள்ள சாமி விக்கிரகங்களுக்கு மஞ்சள், பால், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

இதனையடுத்து பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கான கிடாய், சேவல் பலியிடப்பட்டு அன்னதானம வழங்கப்பட்டது. விழாவில் குலதெய்வமாக வணங்கக் கூடிய கிராமமக்கள், முதுகுளத்தூர், கடலாடி சுற்று வட்டார கிராமமக்கள் கலந்து கொண்டனர்.