மண்டபம்,செப்.14: ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை மின்சார ரயில்கள் இயக்குவதற்கு உச்சிப்புளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்சார சாதன இயந்திர அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை 60 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே நிர்வாகம் மின்சார மூலம் ரயில்களை இயக்குவதற்கு மின் கம்பங்கள் அமைத்தும், கம்பத்தில் மின்சாரம் இயக்குவதற்கு மின் சாதன பொருட்களும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதுபோல ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை மின்சார ரயில் இயக்குவதற்கான உயர் அழுத்த மின் இயந்திரங்கள் மற்றும் கோபுரங்கள் பொருத்தப்பட்ட அலுவலகம் உச்சிப்புளி ரயில் நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை தெற்கு ரயில்வே தலைமை மின் பொறியாளர் கணேஷ் நேற்று பார்வையிட்டார். அதன் பின்னர் அலுவலகத்தை திறந்து வைத்து, இயந்திரங்கள் மற்றும் மின்சார இயக்கம் பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் உச்சிப்புளி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டுள்ள எர்த் கம்பி பகுதிகள், ரயில்வேக்கு சொந்தமான இடத்தின் அளவுகளை பார்வையிட்டார். உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட சிறப்பு ஆய்வு ரயிலில் புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு சென்றார்.