சாயல்குடி, ஆக.30: கடலாடி அருகே பாப்பாகுளம் கிராமத்திலுள்ள குருத்தடி தர்மமுனீஸ்வரர், பறவை காளியம்மன், கருங்குடி கருப்பர், செல்வகணபதி கோயில் 17ம் ஆண்டு கும்பாபிஷேகம் விழா கடந்த வெள்ளிக்கிழமை காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் இரவில் பெண்கள் கும்மியடித்தும்,இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் கொண்டாடி வந்தனர். நேற்று காலையில் கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து மஹா பூர்ணஹீதி உள்ளிட்ட ஹோமங்கள் நடத்தப்பட்டு யாக சாலையிலிருந்து புனித தீர்த்தக்குடம் புறப்பட்டு மூலவர்களுக்கு கும்ப புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து 16 அடி அலகு வேல் எடுத்து, பறவை காவடி எடுத்தும், பாராம்பரிய மேளதாளங்கள், வானவேடிக்கையுடன் பால்குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சாமி விக்கிரங்களுக்கு மஞ்சள், பால், தேன், இளநீர், விபூதி உள்ளிட்ட 18 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபராதனை நடந்தது. பொதுமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலையில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் பாப்பாகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement