சிவகங்கை, செப்.15: சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டியன், ஜீவா ஆனந்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ரவி, குமரேசன், மாவட்ட துணை நிர்வாகிகள் அமலசேவியர், பஞ்சுராஜ், கல்வி மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், ஜான்கென்னடி, உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்வதோடு, மேல்முறையீடு செய்ய வேண்டும். பணி அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த தீர்ப்பால் இந்தியா முழுவதும் சுமார் 20லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதால் மத்திய அரசும் இதில் தலையிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.