சிங்கம்புணரி, செப்.15: சிங்கம்புணரி அருகே மணப்பட்டியில் 30வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மணப்பட்டியில் இருந்து வேட்டையன்பட்டி வரை 4 கிலோமீட்டர் தூரம் வரை சென்று திரும்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சிறார்கள் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியை யாதவ சங்க நிர்வாகிகள் செல்வம் பாஸ்கரன் சிவக்குமார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
இலக்கை நோக்கி மாணவர்கள் ஓடினர். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சிறார்களுக்கும் சீருடை மற்றும் சான்றிதழ் பரிசுகள் வழங்கப்பட்டன.