Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம், ஆக. 7: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் ஆடி வளர்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று மாலையில் நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு, திரவியப்பொடி, பால், சந்தனம், நெய், விபூதி உள்ளிட்ட 18 பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, தாழம்பூ சாற்றி பூஜைகள் நடந்தது. மாலையில் ரிஷப வாகன ஊர்வலம் கோயில் உள்பிரகாரத்தில் நடந்தது. கடலாடி அருகே உள்ள மாரியூர் பவளநிற வள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு பலவகை அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாள், உற்சவர் ரிஷப வாகனம் மற்றும் திமிங்கல வாகனத்தில் வீதி உலா நடந்தது.

ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முகவை ஊரணி விசாலாட்சி உடனுரை காசி விஸ்வநாதர் கோயில், நயினார்கோயில் சவுந்தரநாயகி அம்மன் உடனுரை நாகநாதர், கமுதி மீனாட்சி, சொக்கநாதர், அபிராமம் அருகே உள்ள அ.தரைக்குடி புஷ்பனேஸ்வரி உடனுரை தரணீஸ்வரர், சாயல்குடி மீனாட்சி அம்மன் உடனுரை கைலாசநாதர், ஆப்பனூர் குழாம்பிகை உடனுரை திருஆப்பநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி அம்மன் உடனுரை செஞ்சிடைநாதர், மேலக்கடலாடி அருகே நித்யகல்யாணி உடனுரை வில்வநாதர், மங்களம் ரேணுகாம்பாள் உடனுரை ஆதிசிவன் உள்ளிட்ட சிவன் கோயில்களிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு மஞ்சள், பால், தேன், இளநீர் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன், வில்வ அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.