காரைக்குடி, செப். 19: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16வது மண்டல சார்பில் ஆண்களுக்கான கபடி போட்டி நடந்தது. கல்லூரி துணைமுதல்வர் மகாலிங்கசுரேஷ் வரவேற்றார். ஏஎஸ்பி ஆஷிஷ்புனியா போட்டிகளை துவக்கி வைத்தார். கல்விகுழும ஆலோசகர், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ்.சுப்பையா தலைமை வகித்து பேசுகையில், ‘‘ ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் தேசிய, மாநில மற்றும் மண்டல அளவிலான பல்வேறு போட்டிகளை நடத்திவருகிறோம். இதுபோன்ற போட்டிகளை நடத்துவதன் மூலம் எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு பெரிதும் ஊக்கப்படுத்துவதாக அமையும். எங்கள் கல்லூரி மாணவர்களை பொறுத்தவரை பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தொடர் சாதனை படைத்து வருகின்றனர். இப்போட்டியில் முதல்பரிசு பெற்ற ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணியினரை பாராட்டுகிறோம். விளையாட்டு துறையில் சிறந்து விளங்கினால் அரசு வேலைவாய்ப்புகள் பெற ஏதுவாக அமையும். ஒவ்வொரு மாணவர்களாலும் சாதிக்க முடியும். அதற்கு உரிய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்’’என்றார். கல்லூரி டீன் முனைவர் சிவக்குமார், பேராசிரியர் பழனிவேல், உடற்கல்வி இயக்குநர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement