திருப்புவனம், செப். 19: திருப்புவனம் எம்ஜிஆர் நகரில் குடியிருந்து வருபவர் பாண்டி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் சிவகங்கை மாவட்ட பாஜக சிந்தனை பிரிவு தலைவராக உள்ளார். இவரது மகள் ஆதிஸ்வரி வீட்டின் ஒரு பகுதியில் கடை நடத்தி வருகிறார். பாண்டியின் சொந்த ஊரான கீழராங்கியத்தில் நிலம் வாங்கி கொடுத்ததில் இவருக்கும், அதே ஊரை சேர்ந்த முருகானந்தம், காரைக்குடியை சேர்ந்த வீரப்ப செட்டியார் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், மேலும் இதுசம்பந்தமாக பாண்டியை அவரது செல்போனில் அழைத்து முருகானந்தம் அடிக்கடி கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தலையில் ஹெல்மெட் அணிந்து வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் பாண்டியன் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி கடையையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடி விட்டனர். கடையில் இருந்த பாண்டியின் மனைவி சித்திரைச்செல்வி, மகள் ஆதீஸ்வரியின் 5 வயது மகன் ஆதிஸ்வரன் ஆகியோருக்கு கும்பல் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆதிஸ்வரி அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் சிசிடிவி ஆதாரங்களை வைத்து 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement