சிவகங்கை, செப். 19: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஜெயப்பிரகாஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலனை செய்ய அமைக்கப்பட்ட குழுவை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். 21 மாத கால ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும். அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட உதவியாளர், ஊழியர் சங்க பொது செயலர் வாசுகி, பல்வேறு சங்க நிர்வாகிகள் செல்வம், சுரேஷ், சேவுகமூர்த்தி, முத்துக்குமார், துரைப்பாண்டி, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement