காரைக்குடி, நவ. 18: காரைக்குடியில் அசுர வேகத்தில் டூவீலர்களை ஓட்டி செல்வோர் அதிகரித்து வருவதால் விபத்துகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. காரைக்குடி பகுதியின் வளர்ச்சிக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் அதிகஅளவில் டூவீலர்களில் வருவது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் இளைஞர்கள் அதிக விலையுள்ள ரேஸ் பைக் போன்று உள்ளதையே பயன்படுத்துகின்றனர். இந்த வாகனங்களில் பள்ளி, கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் அதிவேகமாக செல்வது வாடிக்கையாகி வருகிறது. தவிர டூவீலர்கள் அதிக ஒலி எழுப்பி கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே செல்லும் சாலையில் தினமும் விபத்து நடந்து வருகிறது.
அதேபோல் கல்லூரி சாலை, பெரியார் சிலை முதல் பஸ் ஸ்டாண்டு வரை வரும் சாலை என அனைத்து பகுதிகளிலும் அசுர வேகத்தில் டூவீலர்களை ஓட்டி செல்வோர்களால் விபத்து நடப்பது தொடர்ந்து வருகிறது. அதி வேகத்தில் டூவீலர்களை ஓட்டி செல்வோரின் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘‘டூவீலர்களில் ஹெல்மெட் போடாமல் செல்வோர், லைசன்ஸ் இல்லாதவர்களை விரட்டி பிடித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர். ஆனால் அசுர வேகத்தில் செல்வோரை கண்டுகொள்வது கிடையாது. சில டூவீலர்களில் அதிக ஒலி எழுப்பி கொண்டு வேகமாக செல்கின்றனர். இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என தெரியவில்லை. இதுபோன்ற நபர்கள் மீது வழக்குபதிவு செய்து டூவீலர்களை பறிமுதல் செய்தால் தான் மற்றவர்களுக்கும் பயம் வரும்’’ என்றனர்.


