தொண்டி, நவ. 18: தொண்டி பாவோடி மைதானம் பகுதியில் ஆதார் சேவை மைய கட்டிடம் பழைய நிழற்குடையில் செயல்பட்டு வந்தது. அதை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய பெரிய கட்டிடம் கட்ட பேருராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிழற்குடை இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி துவங்கியது. ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து நெரிசல், விபத்து உள்ளிட்ட காரணங்களால் புதிய கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்டுமானப் பணி பாதியில் நிற்கிறது.
உடனடியாக பணியை துவக்க வேண்டும் என்றும் வேறு இடத்தில் துவங்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நகர் முழுவதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து அகமது பாய்ஸ் கூறியது, ‘‘கடந்த காலங்களில் மக்கள் தொகை, வாகன வசதிக்கு ஏற்றார் போல் பாவோடி மைதானம் இருந்தது. தற்போது அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. அதனால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்’’ என்றார். மேலும், சீனிராஜன் கூறுகையில், ‘‘பல வருடங்களாக அந்த இடத்தில் சேவை மையம் செயல்பட்டு வந்தது. அதனால், வெளியூர் உள்ளிட்ட அனைவருக்கும் வசதியாக இருந்தது. தற்போது வேறு இடத்திற்கு மாற்றினால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும். அதனால் அதே இடத்திலையே கட்ட வேண்டும்’’என்றார்.


