காரைக்குடி, அக்.9: காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில், சேக் தாவூத் ஏசி சேல்ஸ் அண்டு சர்வீஸ் கடை நடத்துகிறார். இவர் கடையில் முதுகுளத்தூர் உலையூரைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் குமார்(40). வேலை செய்கிறார். இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மானாமதுரையில் ஏ.சி. சர்வீஸ் கடை நடத்துவதாக கூறி மானாமதுரை காட்டு உடைகுளத்தை சேர்ந்த முனீஸ்வரனிடம் ரூ.5.30 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை முறையாக செலுத்தாமல் குமார், காரைக்குடி பகுதிக்கு வந்து விட்டார். பல ஆண்டுகளாக, குமாரை தொடர்பு கொள்ள முடியாத ஆத்திரத்தில் இருந்த முனீஸ்வரனுக்கு காரைக்குடியில் குமார் வேலை செய்தது தெரியவந்தது. இதனால் மேலப்பிடாவூரை சேர்ந்த அரவிந்த்குமார்(27), அபிமன்யு (22) ஆகியோரை அழைத்துக் கொண்டு காரைக்குடிக்கு காரில் வந்துள்ளனர். கடையில் இருந்த குமாரை காரில் கடத்திச் சென்று கண்டனூர் சாலை அருகே வைத்து மிரட்டியுள்ளனர். அவ்வழியாக வந்த போலீசார் விசாரித்த போது, குமார் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, கடையின் உரிமையாளர் ஷேக் தாவூத் கொடுத்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு போலீசார், முனீஸ்வரன், அரவிந்த் குமார், அபிமன்யு ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
+
Advertisement