சிவகங்கை, அக்.4: சிவகங்கையில் காதி கிராப்ட் சார்பில், மகாத்மா காந்தியடிகளின் 156வது பிறந்த நாளை முன்னிட்டு கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கதர் ரகங்கள், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்கள் ஆகியவைகளுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. ஆடைகளுக்குச் செலவிடும் மொத்தத் தொகையில் ஒரு சதவீதம் கதராடைகளுக்கு செலவு செய்தாலே பல ஏழை எளிய நூற்போர், நெய்வோர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்க இயலும். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சுமார் ரூ.90 லட்சம் மதிப்பீட்டிலான கதர் துணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டிற்கு விற்பனை குறியீடாக ரூ.1.80 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிவகங்கை மற்றும் காரைக்குடி பகுதிகளில் கதர் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்களுக்கு சீருடை வகைகள், அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் 8 தவணைகளில் தங்களது மாத ஊதிய அடிப்படையில், கதர் ரகங்களை கடனாக பெற்று கொள்ளலாம். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை ஆர்டிஓ ஜெஃபிகிரேசியா, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், கதர் அங்காடி அலுவலர் சீனுவாசன், கதர் கிராமத் தொழில் வாரிய பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.