சாயல்குடி, ஜூலை 28: கடலாடி அருகே மேலச்சிறுபோது கிராமத்தில் சாலை சேதமடைந்து கிடப்பதால், புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலச்சிறுபோது மற்றும் எஸ்.குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கீழச்சிறுபோது, கோகொண்டான், சடையனோரி, பனையடினேந்தல், பி.கீரந்தை, பன்னந்தை, பூலாங்கால், புத்தேந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பரிசோதனை, சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
இங்கு முதுகுளத்தூர்-சிக்கல் சாலை சந்திப்பிலிருந்து பிரிந்து மேலச்சிறுபோது கிராமத்திற்கு செல்வதற்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரதான சாலை உள்ளது. இச்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. ஜல்லி கற்கள் பெயர்ந்து போய் கூர்மையாக கிடப்பதால் வாகனங்களின் டயர்களை பதம்பார்த்து வருகிறது. மேலும் போக்குவரத்து வசதிக்காக கிராமத்திற்கு இரண்டு வேளைகளில் மட்டும் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. மற்றவேளைகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிக்கல் சாலை சந்திப்பு பயணியர் நிழற்குடைக்கு நடந்து சென்று வருகின்றனர். அப்போது காலணி இல்லாமல் நடந்து சென்றால் கால்களை பதம் பார்ப்பதாக கூறுகின்றனர்.
மேலும் இச்சாலை கண்மாய் கரையில் அமைந்துள்ளதால் சிறு மழை பெய்தால் கூட, பள்ளங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. கரை மண் கரைந்து சாலையில் விழுவதால் சேரும், சகதியுமாக மாறி, நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படும் நிலை உள்ளது. கிராமத்திற்கு முறையான சாலை வசதியில்லாததால் மழை காலத்தில் ஆட்டோ கூட வந்து செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மழை காலம் துவங்கும் முன் மேலச்சிறுபோது கிராமத்திற்கு புதிய சாலை வசதியை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.