மானாமதுரை, ஆக.4: மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் அவதாரதின விழா ஆக.8ம் தேதி கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நேற்று துவங்கியுள்ளது. மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் சித்தர் மாயாண்டி சுவாமிகள் அவதரித்து பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளதாக இப்பகுதி மக்கள் பெரிதும் நம்புகின்றனர். மாயாண்டி சுவாமி தங்கியிருந்த பட்டமான் என்ற இடத்தில் அவரது சீடர்கள் நூற்றாண்டுகளுக்கு முன் கோயில் எழுப்பி தினமும் பூஜைகள் செய்து வருவதுடன் தினமும் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
இந்தாண்டு சித்தர் மாயாண்டி சுவாமியின் அவதார தினம் ஆக.8ம் தேதி வருகிறது. இதையடுத்து அவரது அவதார நாளன்று காலையில் இருந்து யாகசாலை பூஜைகள், சித்தர் மாயாண்டி சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெறும். இரவு 8 மணிக்கு பூப்பல்லக்கில் மாயாண்டி சுவாமிகளின் திருஉருவம் வீதிஉலா நடைபெறும். விழாவிற்காக பட்டமான் கோயிலில் பராமரிப்பு பணிகள், பந்தல் அமைக்கும் பணிகள், யாகசாலை ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.