சிவகங்கை, நவ. 26: சிவகங்கை அருகே அரசனூர் பகுதியில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு 100 அடி சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சியின் அடிப்படையில் மாநிலத்தில் 15க்கும் அதிகமான இடத்தில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிவகங்கையில் இருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலுப்பக்குடி பகுதியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் அருகில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அதற்கான பணிகள் முழுமையாக தொடங்கப்படவில்லை. 2021ம் ஆண்டு ஆகஸ்டில் தமிழக சட்டமன்ற நிதி நிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு நிலம் அடையாளம் காணும் பணி தொடங்கின. தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு ரூ.342 கோடி மதிப்பீட்டில் தற்போது தொழிற்பேட்டை அமைவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இலுப்பக்குடி, அரசனூர், கிளாதரி உள்ளிட்ட கிராமங்களின் எல்கைகளில் சுமார் 775 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைய உள்ளது. இந்தோ திபெத் எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தை சுற்றிலும் உள்ள நிலத்தில் இந்த சிப்காட் அமைகிறது. 36 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த தொழிற்பேட்டை உருவாக்கப்பட உள்ளது.
சிவகங்கை, மதுரை மாவட்ட எல்லையில் இந்த தொழிற்பேட்டை தொடங்கப்பட்டாலும் முற்றிலும் சிவகங்கை மாவட்டத்திற்குள்ளேயே தொழிற்பேட்டை அமைய உள்ளது. இதன் மூலம் சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பை பெற உள்ளனர். 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் தொழிற்பேட்டைக்கான பணிகள் முடிவடையும் நிலையில் அரசு திட்டமிட்டுள்ளது. தொடக்க நிலையில் இருந்தே ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்லும் அரசனூர் சமத்துவபுரம் அருகில் இருந்து சிப்காட் தொழிற்பேட்டை வரை செல்லும் 100 அடி சாலைக்கு 23.2 ஏக்கர் பரப்பளவில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சாலைக்கான நிலத்தை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
அலுவலர் ஒருவர் கூறுகையில், சாலை போட சுமார் 23 ஏக்கர் தேவைப்படும் நிலையில் அரசு நிலம் 7 ஏக்கர் எஞ்சிய நிலம் தனியாரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தொழிற்பேட்டையை இணைக்கும் வகையில் கனரக வாகனங்கள் செல்லும் 30 மீ அகலத்திலான சாலை போடப்பட உள்ளது. இச்சாலை அரசனூர் சமத்துவபுரம் முடிவடையும் இடத்தில் வர உள்ளது. சாலைக்காக அரசு நிலம் போக எஞ்சிய நிலம் தனியாரிடம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. மதுரை விமான நிலையம், ரயில் நிலையம், தூத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலைகளுடன் இணையும் வகையில் இந்த சாலை அமையும் என்றார்.

