திருப்புவனம், டிச.11: திருப்புவனம் பகுதியில் எண்ணெய் பனை கன்றுகள் நடவு செய்ய 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என திருப்புவனம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருப்புவனம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சர்மிளா தெரிவித்ததாவது:
தேசிய எண்ணெய் பனை இயக்க திட்டத்தின் கீழ் எண்ணெய் பனை திருப்புவனம் ஒன்றியத்தில் 21 எக்டேர் வரை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 1 எக்டேருக்கு ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள எண்ணெய் பனைகன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். ஒரு எக்டேர் நிலத்தில் 9க்கு 9 மீட்டர் இடைவெளியில் 143 பனை கன்றுகளை நடவு செய்யலாம்.
இந்த பனை சாகுபடியில் முதல் 4 ஆண்டிற்கு ரூ.5 ஆயிரத்து 250ம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்வதற்கு ரூ.5 ஆயிரத்து 250ம் என ஒட்டு மொத்தமாக ரூ.10,500 வரை வழங்கப்படும். பயிரிட்ட நான்கு ஆண்டுக்கு பின் பாமாயில் மரத்திற்கு எக்டேருக்கு 5 டன் மகசூல் கிடைக்கும். தொடர்ந்து 30 ஆண்டில் 30 டன்கள் வரை மகசூல் பெறலாம். கூடுதல் மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருப்புவனம் வட்டார விவசாயிகள், தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


