சென்னை: சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி, தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர். நடிகையாகவும் இருந்தார். இவர் மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயில் அர்ச்சகரான கார்த்திக் முனுசாமி என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொண்டு விபச்சார தொழிலில் தள்ள முயற்சித்து வருவதாகவும் அர்ச்சகர் மீது பாலியல் புகார் அளித்தார்.
அதன்பேரில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக் முனுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கடந்த சில நாட்களாக நீதிமன்ற உத்தரவுகளை மீறி தலைமுறைவாகி விட்டதாகவும், அவர் தரப்பிலிருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நந்தினி நேற்று புகார் அளித்துள்ளார்.
மேலும், ஜாமீனில் வெளியே வந்த கார்த்திக் முனுசாமி கடந்த 5 நாட்களாக காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 25ம் தேதி வரை மதுரை காவல் நிலையத்தில் கையொப்பமிட்டுள்ளார். அதன் பின்னர் மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு நடைபெறும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திடுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் இதுவரை விருகம்பாக்கம் காவல் நிலையத்தை வந்து அடையவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நேரில் வந்து கையொப்பமிடாமல் தலைமறைவாகியுள்ளார். இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அந்த புகாரில் நந்தினி தெரிவித்துள்ளார்.