சேலம், அக்.30: சேலம் டவுன் காவல்நிலைய வளாகத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 160 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அது பழமையான கட்டிடம் எனவும், அதனை இடிக்க கூடாது எனவும் தெரிவித்தனர். அதன்பின்னர் புதிய டவுன் காவல்நிலையம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு பின்பகுதியில் கட்டப்பட்டது. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் திடீரென திருச்சி மெயின்ரோடு புலிகுத்தி சந்திப்பில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி எதிர்பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது அங்கு செயல்பட்டு வருகிறது. டவுன் காவல்நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமிஷனர் அனில்குமார் கிரி ஆய்வு செய்தபோது, மழைக்கு ஒழுகுவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து அவரது உத்தரவின் பேரில் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.புலிகுத்தி சந்திப்பில் இருந்து இன்னும் ஒரு மாதத்தில் 5ரோடு பகுதிக்கு மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் லட்சம், கோடி ரூபாய் அளவிலான மோசடி புகார்கள் தான் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே போலீஸ் கமிஷனரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் வகையில் புதிய அலுவலகத்தை டவுன் பகுதியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
+
Advertisement
