கெங்கவல்லி, செப்.30: தலைவாசல் தினசரி மார்க்கெட் ஏலத்தொகையை குறித்த நேரத்தில் கட்டாததால் அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசலில் தினசரி கூடும் சந்தை பிரசித்தம். தமிழகத்தில் 2ம் இடத்தை பிடித்துள்ள இந்த மார்க்கெட்டில் தினசரி 50 முதல் 70 டன் காய்கறிகள் கையாளப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகமே சுங்கம் வசூலித்து வந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் உத்தரவின்பேரில், பிடிஓ அலுவலகத்தில் கடந்த 25ம் தேதி தினசரி சந்தைக்கான ஏலம் நடைபெற்றது. பாண்டியன் தரப்பில் ரூ.1 கோடியே 74 லட்சத்து 5 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தனர். ஏலம் நடைபெற்ற நாளிலிருந்து நான்கு தினங்களுக்குள் ஏலத்தொகையை கட்ட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட தினமான நேற்று பாண்டியன் தரப்பில் ஏலத்தொகையை கட்ட தவறி விட்டனர். இதனால், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாண்டியன் பணம் கட்ட தவறியது தொடர்பாக எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவது என்பது குறித்து நீதிமன்றம் உத்தரவு வந்த பிறகு ஆவன செய்யப்படும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தெரிவித்தனர்.
+
Advertisement