சேலம், செப்.27: சேலம் மாவட்டத்தில் நாளை 78 மையங்களில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை 33,424 ேதர்வர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள குரூப் 2 நிலை பணியிடங்களுக்கான தேர்வு நாளை மாநிலம் முழுவதும் நடக்கிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 78 மையங்களில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை 33,424 ேதர்வர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான கொள்குறி வகை தேர்வு நாளை நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், சேலம் மேற்கு, வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் மற்றும் சங்ககிரி ஆகிய 7 வட்டங்களில் உள்ள 78 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வை சேலம் மாவட்டத்தில் 33,424 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வர்கள் நாளை காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தேர்வர்கள் வருகைபுரிந்தால் தேர்வு எழுதும் மையத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வின் போது எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்வதற்கு ஏதுவாக தேவைக்கேற்ப அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement