ஏற்காடு, செப்.27: ஏற்காடு நகரில் ஒற்றை காட்டு மாடு சாலையில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்காட்டில் சமீப காலமாக வனப்பகுதிகள், காபி தோட்டங்கள் அழிக்கப்பட்டு தங்கும் விடுதிகளாக கட்டப்பட்டு வருகிறது. காடுகள் அழிக்கப்பட்டு தண்ணீர் தேங்கும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது அதிகரித்துள்ளது. ஏற்காடு மலைகிராமங்களில் வனவிலங்குகள் உலா வருவது சாதாரண நிகழ்வாக இருந்தாலும், ஏற்காடு டவுன் பகுதியில் ஒற்றை காட்டுமாடு சுற்றிவரத் தொடங்கி உள்ளது.
நேற்று ஏற்காடு பஸ் நிலையம் அருகில் காட்டு மாடு ஒன்று சாலையில் சாவகாசமாக உலா வந்தது. இதனை ஆச்சர்யமாக பார்த்தாலும், பள்ளிக் குழந்தைகள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல அச்சம் அடைகின்றனர். யாருக்கும் எந்தவித தொந்தரவும் விளைவிக்காமல் சாலையில் ஒற்றை காட்டு மாடு சுற்றித்திரிந்தாலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும், காட்டு மாட்டை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டவும், அவை வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் பாதுகாக்க வேண்டும் எனவும் வனத்துறையினரை பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.