சேலம், நவ.25: சேலத்தில் பிறந்து ஒருமாதமே ஆன நிலையில், குழந்தையுடன் தவிக்க விட்டு கணவர் மறுமணம் செய்து கொண்டதாக, மாற்றுத்திறனாளி இளம்பெண் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது. இதில், சேலம் அரிசிப்பாளையம் மல்லிசெட்டி தெருவை சேர்ந்த விஜயா (45), இவரது மகள் ஜோதிலட்சுமி (21) மற்றும் பிறந்து ஒருமாதமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையுடன் வந்து மனு ஒன்றை அளித்தனர்.
இதுகுறித்து விஜயா கூறுகையில், ‘‘எனது மகள் ஜோதிலட்சுமி, பிறவியிலேயே காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். எனது கணவரின் பெற்றோர் வீடு, மணியனூரில் உள்ளது. தாத்தாவை பார்க்க அடிக்கடி ஜோதிலட்சுமி சென்றபோது, அங்குள்ள சாமுண்டி தெருவை சேர்ந்த சிவானந்தம் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கர்ப்பமான ஜோதிலட்சுமிக்கு கடந்த மாதம் 25ம் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சிவானந்தம் குழந்தையை பார்க்க வரவில்லை. அதேசமயம், ஜோதிலட்சுமியின் செல்போனுக்கு சிவானந்தம் பல வீடியோக்களை தொடர்ந்து அனுப்பியுள்ளார்.
அதில், ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டது, அப்பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்கள் இருந்தன. இதுகுறித்து கேட்டபோது, `நான் திருப்பூரை சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இனி உங்களை பார்க்க வர மாட்டேன்’ என கூறிவிட்டார். இதனால் எனது மகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிவானந்தத்தை எனது மகளுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்றார்.



