கெங்கவல்லி, செப்.24: ஆத்தூர் அருகே தென்னங்குடிபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 10க்கும் மேற்பட்டவர் கோயிலில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கோயில் வளாகத்தில், ராணி என்பவர் சமையல் செய்து கொடுத்து வருகிறார். நேற்று காலை 8 மணியளவில், ராணி சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென காஸ் கசிவினால் தீப்பிடித்தது. இதை பார்த்தவுடன் ராணி சத்தம் போட்டுக்கொண்டே வெளியே ஓடி வந்தார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பிய்ச்சியடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் சமையலறையில் இருந்த மளிகை பொருட்கள், காஸ் அடுப்பு, மேல் கூரையில் மேயப்பட்ட சிமெண்ட் அட்டைகள், பாத்திரங்கள் முழுவதும் தீயில் எரிந்து கருகின. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
+
Advertisement