கெங்கவல்லி, செப். 24: தலைவாசல் தினசரி மார்க்கெட் ஏலம், நீதிமன்ற உத்தரவின் பேரில், நாளை போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் தினசரி மார்க்கெட்டுக்கு, கடந்த 2024 மார்ச் மாதம் நடைபெற்ற ஏலத்தின் போது, அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமான விலை கேட்கப்பட்டதால், தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், மீண்டும் ஏலம் நடத்தவேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 30ம் தேதிக்குள் தலைவாசல் தினசரி மார்க்கெட் ஏலத்தை விட வேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர், தலைவாசல் பிடிஓ, தலைவாசல் ஊராட்சி தனி அலுவலர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து தலைவாசல் தினசரி மார்க்கெட் ஏலம் நாளை (25ம் தேதி நாளை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் நடைபெறும் போது, போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, ஊராட்சி ஆணையாளர், இன்ஸ்பெக்டர் கந்தவேலிடம் மனு அளித்துள்ளார். தலைவாசல் தினசரி மார்க்கெட்டிற்கு தினமும் 50 முதல் 70 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். நாளை நடைபெறும் மார்க்கெட் ஏலம், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 6 மாத காலத்துக்கு விடப்படுகிறது.