ஓமலூர், செப்.23: ஓமலூர் பஸ் நிலையத்தில் உள்ள செல்போன் கடையை உடைத்த மர்ம நபர்கள் 2 லேப்டாப்கள், 5 செல்போன் மற்றும் பணத்தை திருடிச்சென்ற சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் பஸ் நிலையத்தில் கள்ளிக்காட்ைட சேர்ந்த சௌந்தர் என்பவர் செல்போன், லேப்டாப் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து விட்டு, கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், ஞாயிற்றுகிழமை அதிகாலை 5 மணியளவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் உள்ளே வைத்திருந்த 2 லேப்டாப், 5 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்றார். மர்ம நபர் கடையில் திருடி விட்டு, அதை கைப்பையில் போட்டுக்கொண்டு, கடையின் கீழே பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்து இருந்த நிலையில், சாவகாசமாக நடந்து சென்ற சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இது ஓமலூர் நகர மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement