கெங்கவல்லி, நவ.22: ஆத்தூரில், ரூ.5 லட்சம் மதிப்பிலான 200 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆத்தூர் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்ஐ சிவசக்தி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, ராணிப்பேட்டை சிவாஜி தெருவில் வசிக்கும் கணேசன்(53),என்பவரின் ஓட்டு வீட்டில் குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, ரூ.5 லட்சம் மதிப்பிலான 200 கிலோ எடை கொண்ட 13 மூட்டை குட்காவை கைப்பற்றினர். இதுதொடர்பாக கணேசனை கைது செய்தனர். மேலும் குட்கா எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


