மேட்டூர், செப்.22: மேச்சேரி சுப்பிரமணியநகரை சேர்ந்தவர் டாக்டர் வினோத்குமார். மேட்டூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு டாக்டர் வினோத்குமார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் பாப்பா (65), என்பவரின் வளர்ப்பு நாய் மருத்துவரை கடிக்க விரட்டி சென்றது. இதனால் நாயை வினோத்குமார் விரட்டி உள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பாப்பா தனது மகன் மாதேஷ் (40) என்பவரை அழைத்துக் கொண்டு டாக்டர் வினோத் வீட்டிற்கு சென்றார்.
பாப்பாவும் அவரது மகன் மாதேசும் டாக்டர் வினோத்குமாரை அடித்து உதைத்தனர். தாக்குதலில் காயமடைந்த டாக்டர் வினோத்குமார், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து பாப்பாவையும் அவரது மகனையும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாதேஷ் கைது செய்யப்பட்டு மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஓமலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.