சேலம், நவ.21:சேலத்தை அடுத்த கருப்பூர் வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள கல் குவாரிகளில் இருந்தும், அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்தும் சிலர் அனுமதியின்றி கிராவல் மண்ணை லாரிகளில் கடத்தி வருவதாக, சேலம் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று முன்தினம், கனிமவளத்துறை தனித்தாசில்தார் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் வெள்ளாளப்பட்டியில் உள்ள தனியார் கல்குவாரி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்தனர். அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர், வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து, லாரியில் சோதனையிட்டதில் 4 யூனிட் கிராவல் மண் இருந்தது. அதனை அனுமதியின்றி கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ரூ.3,800 மதிப்புள்ள கிராவல் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து கருப்பூர் போலீசில் ஒப்படைத்து, தாசில்தார் ராஜ்குமார் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
+
Advertisement


