சங்ககிரி, நவ.19: சங்ககிரியில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, சங்ககிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மேற்பார்வையில், எஸ்ஐ அருண்குமார் தலைமையிலான போலீசார், சங்ககிரி பஸ் ஸ்டாப்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேர் வேகமாக நடந்து சென்றனர். சந்தேகமடைந்த போலீசார், அவர்களை விரட்டி பிடித்து சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த பையில், 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, தர்மபுரி மாவட்டம், கொத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரசுராம்(25), கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகா எரும்பூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில், ஆந்திராவில் பகுதியில் இருந்து சங்ககிரி வழியாக திருப்பூருக்கு கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரூ.80 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
+
Advertisement


