ஜலகண்டாபுரம், நவ.13: ஜலகண்டாபுரத்தை அடுத்த அம்மாசியூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (65). விவசாயியான இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இதற்காக வீட்டின் அருகே பட்டி அமைத்துள்ளார். தினமும் பகல் நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று விட்ட, மாலையில் பட்டியில் அடைப்பது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன், தங்கவேல் வழக்கம் போல இரவு, ஆடுகளை பட்டியில் அடைத்தார். நேற்று முன்தினம் காலையில் பார்த்த போது, பட்டியில் 3 ஆடுகள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தன. ஒரு ஆடு படுகாயமடைந்த நிலையில் இருந்தது. இதுபற்றி வருவாய் துறையினர், கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர்கள் காயமடைந்த ஆட்டுக்கு சிகிச்சையளித்தனர். அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் கடித்ததால் ஆடுகள் இறந்தது தெரிய வந்துள்ளது. இறந்த ஆடுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. கால்நடைகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement
