கெங்கவல்லி, செப்.10: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி, பனியன் கம்பெனியில் பணியாற்றி வரும் இவர், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஊருக்கு வந்திருந்தார். நேற்று அதிகாலை திருப்பூர் திரும்புவதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். ஆத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் சென்றபோது, பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், பாலாஜி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததை நோட்டமிட்டு அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை திருடினார். இதனால், திடுக்கிட்டு விழித்த பாலாஜி அந்த வாலிபரை மடக்கி பிடித்து, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். எஸ்ஐ சிவசக்தி விசாரித்ததில், பாலாஜியிடம் பர்ஸ் திருடியவர் ஆத்தூர் திருவிக தெருவைச் சேர்ந்த ஹரிஹரன்(21) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement