சேலம், அக்.8: சேலம் அருகே கணவன் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் தெரிவித்து கர்ப்பிணி மனு அளித்தார். சேலம் அடுத்த சிவதாபுரம் பனங்காடு பகுதியைச் சேர்ந்த மலர்விழி (25) என்பவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘எனக்கும், சேலத்தாம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது, 20 பவுன் நகை மற்றும் இதர சீர்வரிசைகளை எனது பெற்றோர் வழங்கினர். திருமணமான 2 மாதத்தில் நான் கர்ப்பமடைந்ததை தெரிந்து கொண்ட எனது கணவர் மற்றும் குடும்பத்தினர், வரதட்சணையாக மேலும் 50 பவுன் நகை, கார், பணம் மற்றும் புதிய வீடு கட்டித்தர வேண்டும் என வற்புறுத்தினர். குடும்ப சூழ்நிலை காரணமாக எனது பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் வரதட்சணை கேட்டு என்னை கடுமையாக தாக்கி, கொடுமை செய்தனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
+
Advertisement