கெங்கவல்லி, டிச.5: வீரகனூரில் புதியதாக கட்டப்பட்டு வரும் பொன்னாளியம்மன் அணைக்கட்டு கரைகள் உடைந்து, விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மஞ்சள், சேனைக்கிழங்கு பயிர் சேதமடைந்துள்ளது. தலைவாசல் தாலுகா, வீரகனூர் பேரூராட்சி தெற்கு கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பொன்னாளியம்மன் அணைக்கட்டுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு ஏதுவாக கரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர் மழையால், பச்சமலை பகுதியில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. இதனால், புதிதாக அமைக்கப்பட்ட கரை உடைந்து, அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், மஞ்சள் மற்றும் சேனைக்கிழங்கு பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பொக்லைன் கொண்டு அருகில் உள்ள ஓடை வழியாக வெள்ள நீர் திருப்பி விடப்பட்டது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது குறித்து தகவலறிந்த தலைவாசல் தாசில்தார் பாலாஜி மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரத்தினவேல் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து பயிர் சேதம் தவிர்த்து பாதுகாப்பாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
+
Advertisement

