இடைப்பாடி, டிச.5: பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு செழித்து வளர்ந்து பொங்கல் அறுவடைக்காக தயார் நிலையில் உள்ளது. சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு சாகுபடி பிரசித்தம். பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, காசிக்காடு, கூடக்கல், குப்பனூர், மாட்டுக்கார பெருமாள் கோயில், மூலப்பாறை, சர்வரெட்டியூர், ஓணாம்பாறை, காட்டுவளவு, நெடுங்குளம், காட்டூர், பூமணியூர், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், செட்டிப்பட்டி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் செங்கரும்பு பயிரிட்டனர். செங்கரும்பு செழித்து வளர்ந்து, தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகையின்போது இப்பகுதியில் இருந்து தமிழகம் முழுவதும் செங்கரும்பு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு லோடு கணக்கில் கொண்டு செல்லப்படும். அரசு சார்பில், ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கும் திட்டத்தால் பூலாம்பட்டி செங்கருப்புக்கு மவுசு அதிகரித்தது. கூட்டுறவு அதிகாரிகள் நேரடியாக வந்து கரும்புகளை பார்வையிட்டு மொத்தமாக புக்கிங் செய்வதால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. காவிரி நீர் பாசனத்தால் இப்பகுதியில் விளையும் செங்கரும்பு மிகவும் தித்திப்பாகவும், திரட்சியாகவும் உள்ளது. இதனால், ஆண்டுதோறும் செங்கரும்பு கொள்முதலுக்காக வியாபாரிகள் மட்டுமின்றி, கூட்டுறவு அதிகாரிகளும் குவிந்த வண்ணம் உள்ளனர்,’ என்றனர்.

