சேலம், ஆக.5: கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனுக்களை சரிவர விசாரிக்கவில்லை என்ற புகாரின் பேரில் 2 எஸ்ஐக்கள் உள்பட 3 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி கௌதம்கோயல் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை எஸ்ஐ செந்தில்குமரன், சிறப்பு எஸ்ஐ முத்துமாணிக்கம் ஆகியோர் சரிவர விசாரிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், லாட்டரி, போதை புகையிலை விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு சாதகமாக சில போலீசார் செயல்படுவதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி கௌதம்கோயல் நேரடி விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் முடிவில், எஸ்ஐ செந்தில்குமரன், சிறப்பு எஸ்ஐ முத்துமாணிக்கம், ஸ்டேஷன் அமைச்சு பணியாளர் சரவணன் ஆகிய 3 பேரை சேலம் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் உடனடியாக தங்களது பணியில் இருந்து விடுவித்துக்கொண்டு மாவட்ட ஆயுதப்படைக்கு செல்ல உத்தர விடப்பட்டது. அதன்பேரில் நேற்று மாலையே 3பேரும் சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படைக்கு வந்தனர். இந்த கொங்கணாபுரம் ஸ்டேஷனில் மேலும் சில போலீசார், வழக்குகளை சரிவர விசாரிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். 2 எஸ்ஐக்கள் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இச்சம்பவம் சேலம் மாவட்ட போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.